ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியாவை மீறி உலகில் எந்த நாடும் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்ற நிலையில் ஈழத்தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய இந்தியா ஏன் ஈழத்தமிழர்களுடன் பகைமை பாராட்டுகிறது என்பதற்கான காரணங்களை இங்கு சொல்லி பழைய விடயங்களை கிளறுவதை விட இப்போது அந்த பகைமையை மறந்து இந்தியா ஈழத்தமிழர்களுக்கு உதவக்கூடிய இராஜதந்திர நடவடிக்கைகள் தமிழர் தரப்பில் எடுக்கப்பட்டிருக்கிறதா என்பதுதான் கேள்வி.
உண்மையில் இந்தியா ஈழத்தமிழர்களின் நண்பனாகத்தான் இருந்திருக்க வேண்டும். தமிழ்நாடு என்ற பெரிய மாநிலத்தின் ஆதரவுத்தளத்தை மத்திய அரசு பெற வேண்டுமாக இருந்தால் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுடன் மொழியால் கலாசாரத்தால் மதத்தால் ஒன்று பட்ட ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத்தான் இந்தியா இருக்க வேண்டும்.
ஆனால் இந்தியா ஈழத்தமிழர்களின் நேர் எதிரியான சிங்கள தேசத்துடன் அல்லவா நட்பு பாராட்டி நிற்கிறது. இதற்கு இந்தியாவின் மீது தவறு சொல்லவதை விட இந்தியாவை சரியாக கையாள தவறிய எங்களில்தான் பிழை இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.
மகிந்த ராசபக்சவிடமிருந்து அல்லது சிங்கள தேசத்திடமிருந்து ஈழத்தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியதற்கு பல விடயங்கள் இருக்கின்றன.
மிகப்பெரிய இனப்படுகொலையை புரிந்தவர்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறதா என உங்களில் பலர் என்மீது கோபக்கணைகளை வீசக்கூடும்.
ஆனால் இந்த கோபக்கணைகளை விடுத்து நிதானமாக சிந்தித்தால் நாங்கள் செய்யத்தவறிய பல விடயங்களை மகிந்த அல்லது சிங்கள தேசம் செய்து அதை தங்களுக்கு சாதகமாக்கியிருக்கிறார்களே என்பதை அறிந்து கொண்டால் நிட்சயம் என்னுடைய தரப்பு வாதத்தை ஏற்றுக்கொள்வீர்கள்.
பொதுவாகவே தன்னுடைய எதிரியுடன் நட்புக்கொள்பவர்களை எதிரியின் பக்கம் நிற்பவர்களை பகை உணர்வுடன் பார்ப்பதும் அவர்களுடனான தொடர்பாடல்களை தவிர்ப்பதும் இயல்பான ஒரு விடயம்தான். உலக நாடுகளில் அவ்வாறுதான் நாடுகள் அணிசேர்கின்றன.
ஆனால் ஸ்ரீலங்காவின் விடயத்தில் அது மாறுபட்டே காணப்படுகிறது.
இந்தியாவின் நேர் எதிரி நாடுகளாக சீனாவும் பாகிஸ்தான் விளங்குகின்றன. ஆனால் இலங்கையின் மிக நெருங்கிய நண்பர்களாக இந்த மூன்று நாடுகளும் விளங்குகின்றன. அதேபோல அமெரிக்காவும் ஈரானும் எதிரிகளாக இருக்கலாம். ஆனால் இந்த இரு நாடுகளும் இலங்கைக்கு உதவி வழங்கும் நேசநாடுகளாக விளங்கி வருகின்றன.
இலங்கைக்கு சீனா ஆயுதங்களை வழங்குகின்ற போது அதைவிட அதிகமான ஆயுதங்களை இந்தியா வழங்க துடிக்கின்றது. அதற்கு மேலாக இந்தியாவின் மற்றொரு எதிரியான பாகிஸ்தான் ஆயுதங்களையும் பயிற்சிகளையும் இலங்கைக்கு வழங்குகிறது.
சீனா அம்பாந்தோட்டை தொடக்கம் கொழும்புவரையான தொடரூந்து பாதைக்கு நிதி உதவி வழங்குகிறது என்றால் இந்தியா கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையான தொடரூந்து பாதைக்கு உதவி வழங்குகிறது. இலங்கைக்கு நிதி உதவி வழங்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சீனாவை விட அதிக நிதி உதவியை இலங்கைக்கு வழங்குவதற்கு இந்தியா துடியாக துடிக்கிறது. இலங்கையின் அடிப்படை கட்டுமானப்பணிகளை விருத்தி செய்வதற்கென இந்த வருடம் மட்டும் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இந்தியா சம்மதித்திருக்கிறது.
உலகில் எந்த ஒரு நாடும் இலங்கையை எதிரி என்று சொல்லாத அளவுக்கு சிங்கள தேசம் நட்புசக்திகளை வளர்த்துக்கொண்டதன் காரணமாகவே உலகில் உள்ள 35க்கும் மேற்பட்ட நாடுகள் சேர்ந்து எங்களை அழித்து கொண்டதாக நாங்கள் தலையில் அடித்துக்கொள்கிறோம். உலகில் உள்ள அத்தனை நாடுகளும் உதாரணமாக ஈழத்தமிழர்கள் நம்பியிருக்கும் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் கூட வடகிழக்கில் ஆயுதப்போராட்டத்தை அடக்குவதற்கு நேரடியாக உதவி செய்திருந்தன என்பதுதான் உண்மை. இதற்கு காரணம் இந்தியா உட்பட உலக நாடுகளை நட்புசக்தியாக மாற்றுவதற்கு தவறியதுதான்.
சிங்கள தேசத்திடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான விடயம் எதிரியையும் நண்பனாக்குவது. ஆனால் தமிழர்களாகிய நாம் என்ன செய்திருக்கிறோம். தேடி தேடி எதிரிகளைச் சம்பாதித்திருக்கிறோம். இந்தியா துரோகி, சீனா பாகிஸ்தான் அமெரிக்கா எங்கள் எதிரி என சொல்லிச்சொல்லியே உலகில் பகைவர்களை சம்பாதித்ததை தவிர எதை சாதித்திருக்கிறோம். ஆகக்குறைந்தது தமிழ்நாட்டையாவது எங்கள் நட்பு சக்தியாக மாற்றியிருக்கிறோமா என்றால் அதுவும் பூச்சியம் தான். தமிழ்நாட்டில் ஆட்சியமைக்ககூடிய பலத்தில் இருக்கும் தி,மு.கவையோ அதிமுகவையோ எங்கள் நட்புசக்தியாக மாற்ற முடியாமல் போயிருக்கிறதே.
ஒரு தொகுதியில் கூட தனித்து நின்று வெற்றிபெற முடியாத சிறு கட்சித்தலைவர்களை தவிர தமிழ் நாட்டில் ஈழத்தமிழர்களின் நட்பு சக்தி என சொல்லிக்கொள்வதற்கு யார் இருக்கிறார்கள்.
கருணாநிதி துரோகி அவர் துரோகி இவர் துரோகி என தேடி தேடி துரோகி பட்டங்களை வழங்கிக்கொண்டிருப்பதை தவிர உருப்படியாக சாதித்தது வேறு ஒன்றும் இல்லை என்பதுதான் உண்மை.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனா முதல் மகிந்த வரை சிங்கள தலைவர்கள் இந்தியாவை எவ்வாறு கையாண்டிருக்கிறார்கள், பகைவனைக்கூட நண்பனாக்கி இருக்கிறார்கள் என்ற வரலாற்றை தமிழர்கள் படிக்க வேண்டும்.
தன்னுடைய எல்லைக்குள் அத்துமீறி உணவுப்பொட்டலங்களை வீசிய இந்தியாவை ஜே.ஆர் போர்க்குணம் கொண்டு எதிர்க்கவில்லை. துரோகி என்று திட்டித்தீர்க்கவில்லை. எதிரியாக இருந்த இந்தியாவை அழைத்து தன்னுடைய மற்றொரு எதிரியான தமிழர்களோடு மோதவிட்டு தான் தப்பிக்கொண்ட ஜே.ஆரின் தந்திரத்தை எப்படி குறைவாக மதிப்பிட முடியும்?
இந்தியாவும் ஈழத்தமிழர்களும் மோதவேண்டும் என ஜே.ஆர்.விரித்த வலையில் தமிழர்கள் விழுந்தது யாரின் தவறு.
விடுதலை வேண்டி நிற்கும் எந்த ஒரு இனமும் எதிரியுடன் மோதுவதற்கு முதல் தன்னைச்சுற்றி மட்டுமல்ல எதிரியைச்சுற்றியிருக்கின்றவர்களையும் நட்புச்சக்தியாக மாற்றிக்கொள்ள வேண்டும். ஆதரவுத்தளம் ஒன்றை தேடிக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment