ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் வீட்டில் அல்லது அலுவலகத்தில் ஒரு மேஜையில் அமர்ந்து கொண்டு செயல்படுகிறது. ஆனால் ஸ்மார்ட் போன்கள் நாம் எங்கு சென்றாலும் உடன் வருகின்றன. அதன் மூலம் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. எவ்வளவுதான் திறனுடன் செயல்பட்டாலும், ஒரு ஸ்மார்ட் போன், பெர்சனல் கம்ப்யூட்டராக முழுமையாக இடம் பெறாது.
எனவே தான் பெர்சனல் கம்ப்யூட்டருக்கும், ஸ்மார்ட் போனுக்கும் இடையே ஒரு சாதனம் இரண்டின் பயன்பாட்டினையும் முழுமையாகத் தரும் வகையில் தேவையாய் இருந்தது. அந்த இடத்தில் டேப்ளட் பிசி வந்து நம் தேவைகளை நிறைவு செய்து வருகிறது.
இதனால், கம்ப்யூட்டர் பயன்பாடு தற்போது இரு வகை கணினிகளில் மேற்கொள்ளப்பட்டு, எதில் தொடர்வது என்ற கேள்விக் குறியுடன் தொடர்கிறது. ஆனால், அண்மையில் லாஸ்வேகாஸ் நகரில் நடந்து முடிந்த தகவல் தொழில் நுட்பக் கருத்தரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட பட்டயக் கணிப்பொறிகளைக் (Tablet PC) காண்கையில், அதன் மாடல் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்கையில், இவை மொத்தமாக மக்களை சென்றடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே தெரிகிறது. எனவே நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், அதன் சில அம்சங்களை இங்கு பார்க்கலாம்.
1. பழைய மாடலில் மாற்றம்: தற்போதைய டேப்ளட் பிசி இதன் முன்னோடிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. முதலில் ஒரு டேப்ளட் பிசி, லேப்டாப் கம்ப்யூட்டரில், சுழலும் திரை ஒன்றை இணைத்தது போல வடிவமைக்கப்பட்டது. ஆனால் மக்களிடம் இவை எடுபடவில்லை. பின்னர், ஸ்மார்ட் போன் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்களும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட் சாதனம் உண்டாக்கிய சலசலப்பும், மக்களை புதிய கோணத்தில் பார்க்க வைத்தது. ஐ-பேட் இதுவரை டேப்ளட் பிசி குறித்து நிலவி வந்த அம்சங்களை மாற்றிப் போட வைத்தது. அந்நாளைய காம்போசிசன் நோட்டுப் போல தோற்றத்தில் பல டேப்ளட் பிசிக்கள் வடிவமைப்பு கொண்டுள்ளன. அனைத்தும் டச் ஸ்கிரீன் தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன.
2. புதிய ஸ்லேட்கள்: பல டேப்ளட் பிசிக்கள் புதிய டிஜிட்டல் ஸ்லேட்டுகளாகத்தான் வடிவம் பெற்றுள்ளன. இவற்றில் மிகவும் பிரபலமானது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட். 9.5 அங்குல அகலத்தில், 7.5 அங்குல உயரத்தில், 0.5 அங்குல தடிமனில் இது வெளியான போது, இதுவே டேப்ளட் பிசிக்களின், வரையறுக்கப்பட்ட வடிவமாக அமைந்துவிட்டது. பின்னர் சாம்சங் கேலக்ஸி டேப் 7 அங்குல திரையுடன் அறிமுகமான போது, கைகளுக்குள் அடங்குவதற்கான சரியான அளவு அது என வரையறை செய்யப்பட்டது.
தற்போது நாம் விரும்பும் அளவில் திரையுடன் கூடிய டேப்ளட் பிசிக்களை தேர்ந்தெடுக்கலாம். டேப்ளட் பிசிக்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டு, கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நிச்சயம் இது ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
3. ஆப்பரேட்டிங் சிஸ்டம்: பிரியமான அளவில் டேப்ளட் பிசிக்கள் தயார் ஆவது மட்டுமின்றி, இவற்றின் இயக்கத்திற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளன. இவற்றில் ஐபோன், ஐபேட், ஐ பாட் டச் ஆகியவற்றில் இயங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் முன்னணியில் உள்ளது. அடுத்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் இடம் பெறுகிறது. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்துடன், 12க்கும் மேற்பட்ட புதிய டேப்ளட் பிசிக்கள் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்ட் சிஸ்டமும் 1.6, 2.0, 2.1 மற்றும் 2.2 எனப் பல பதிப்புகளில் கிடைக்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய விண்டோஸ் 7 சிஸ்டத்தினை, டேப்ளட் பிசிக்கானதாகக் கொண்டு வந்துள்ளது. பிளாக்பெரியைத் தயாரிக்கும் ஆர்.ஐ.எம். நிறுவனம், QNX என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு வகையாகும். டேப்ளட் பிசி தயாரிப்பில், பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி, சிறிய நிறுவனங்களும், தங்கள் பங்கைப் பிடிக்க பலத்த போட்டியில் இறங்கி உள்ளன
No comments:
Post a Comment