லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. போராட்டக்காரர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தும் ராணுவத்தின் ஒரு பிரிவினர் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் பென்காசி உள்ளிட்ட 2 நகரங்கள் போராட்டக்காரர்கள் பிடித்தனர்.
அதன் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது, “மிசுரதா” என்ற 3-வது நகரத்தையும் போராட்டக்காரர்கள் பிடித்துள்ளனர். இது தலைநகர் திரிபோலியில் இருந்து சுமார் 200 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த நகரத்தை விட்டு அதிபர் கடாபியின் ஆதரவு படைகள் ஓடிவிட்டன. இந்த நகரின் சிறு பகுதி மட்டுமே ஆதரவு ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது.
இதையொட்டியுள்ள பாப் ஆல்- அஷிஷியா நகரமும் போராட்டக்காரர்கள் வசம் செல்லும் நிலை உள்ளது. எனவே, அதை காப்பாற்றிக் கொள்ள கடாபி தனது டாங்கி படைகளை அரண்போல் நிறுத்தி வைத்துள்ளார். இதுவரை லிபியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட 2000-க்கும் மேற்பட்டவர்கள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
வன்முறையை முடிவுக்கு கொண்டு வருமாறு அதிபர் கடாபியை 15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தி உள்ளது. மேலும், கடாபி அரசுக்கு ஆயுதத்தடை விதித்தும், கடாபியின் சொத்துக்களை முடக்கியும், அவர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதை தடை செய்யும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
போராட்டத்தின்போது கடாபி அரசால் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் மற்றும் குற்றங்கள் குறித்து சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் விசாரிக்கவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அதிபர் கடாபி லிபியாவை விட்டு விரைவில் வெளியேற வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நா.சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது. இதில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, அதிபர் கடாபியின் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். எனவே, அவர் மேலும் ரத்தம் சித்தாமல், வன்முறையை கைவிட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து போராட்டம் நடைபெறுவதை தொடர்ந்து சுமார் 10 ஆயிரம் பேர் லிபியாவில் இருந்து துனிசியாவுக்கு சென்றுவிட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் எகிப்தை சேர்ந்தவர்கள். இந்த தகவலை அந்நாட்டு பத்திரிகை தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment