svr.pamini

Montreal Time

Sunday, April 3, 2011

முள்ளிவாய்க்கால் முதல் பென்காசி வரை சர்வதேசத்தின் இரட்டை வேடங்கள்...






பாரசீகக்குடாவில் கடந்த ஒரு வாரமாக மக்களின் எழுச்சிப் போராட்டங்கள் கொதி நிலையை அடைந்துள்ளது. பூகம்பமும், சுனாமியும் ஜப்பானைத் தாக்கி அணு உலைகளில் கசிவினை ஏற்படுத்தி இரண்டாம் உலக மகா யுத்த காலத்து ஹிரோசிமா, நாகசாகி அழிவுகளை நினைவுபடுத்துகின்றன.
எரிசக்தித் தேவையின் 70 வீதத்தை அணுசக்தி ஊடாகப் பெறும் ஜப்பான், அணுஉலை வெடிப்பினால் மோசமாகப் பாதிக்கப்படுவதோடு மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளினால் நிமிர முடியாத அளவிற்கு முடக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து மீண்டெழக்கூடிய பொருளாதார பலம் ஜப்பானிற்கு இருக்கும் அதேவேளை, மன்னராட்சி மற்றும் சர்வாதிகார ஆட்சிகளினால் நீண்ட கால பாதிப்பிற்குள்ளான அரபு நாடுகள், எண்ணெய் வளம் இருந்தும் தம்மை மீளக் கட்டியெழுப்ப இந்த வல்லரசுகள் இடம் தருமா என்கிற கேள்வி எழுகிறது.
இருப்பினும் உலகின் கைத்தொழில் சக்தி மையமாகக் குறிப்பிடப்படும் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட ஜப்பான், தனது கைத்தொழில் உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்களின் கையிருப்பு தீர்ந்து வரும் நிலையில் மேலதிக இறக்குமதி தடைப்படுவதால் பாரிய சிக்கலை எதிர்கொள்வதைக் காணலாம்.
உற்பத்திக்குத் தேவையான கனிமங்களை வெவ்வேறு இடங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆனால் உலக எண்ணெய் உற்பத்தியில் பெரும்பாலான விழுக்காட்டினை மத்திய கிழக்கு நாடுகளே கொண்டிருக்கின்றன.
அதாவது, பூமியதிர்வுகளால் பாதிப்படைந்துள்ள ஜப்பானில் அணு உலைகள் நீண்ட காலத்திற்கு எரிபொருள் சக்திப் பற்றாக்குறையை ஏற்படுத்தப் போகிறது. அதனை ஈடு செய்ய குறிப்பிட்ட காலத்திற்காகவாவது எண்ணெய் இறக்குமதியில் தங்கியிருக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஜப்பான் தள்ளப்படும்.
அதுமட்டுமல்லாது ஜப்பானைப் பொறுத்தவரை அதனுடைய முழுமையான பொருளாதாரமும் இறக்குமதியாகும் மூலப் பொருட்களிலும் எண்ணெய்யிலும் தங்கியுள்ளது.
ஏற்கனவே உயர் தொழில்நுட்பம் சார்ந்து உற்பத்தியாகும் பொருட்களுக்குத் தேவையான அரிதான கனிமங்களை (Rare Earth Minerals) இவற்றின் உலக ஏற்றுமதியில் 90 வீத விழுக்காட்டினை கொண்ட சீனாவிடமிருந்து பெறுவதில் அண்மைக் காலமாக பல சிக்கல்களை ஜப்பான் எதிர்கொள்கிறது.
உலக வர்த்தக அமைப்பு (WTO) வரை இவ்விவகாரம் கொண்டு செல்லப்பட்டது.
இவை தவிர பணவீக்கம், உணவு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, இயற்கை அனர்த்தம் ஏற்பட்டாலும் பலமடையும் ஜப்பானிய "யென்' நாணயத்தின் பெறுமதி போன்றவை உள்நாட்டிலும் வெளிநாட்டு ஏற்றுமதியிலும் பலத்த தாக்கங்களை உருவாக்குகின்றது.
அண்மையில் வீழ்ச்சியடையும் பங்குச் சந்தையை நிமிர்த்துவதற்கு திறைசேரியிலிருந்து 185 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாணயச் சந்தையில் (Money Market) உட்செலுத்தியது.
இதனால் சற்று நிமிர்ந்த பங்குச் சந்தை மறுபடியும் விழ தினமும் மேலதிகமாக பல பில்லியன் டொலர்களை நாணயச் சந்தையில் கரைத்துக் கொண்டது ஜப்பான். ஆனால் புழக்கத்தில் விடப்பட்ட "யென்' நாணயத்தை வாங்குவோரின் அதிகரிப்பினால் அதன் பெறுமதியும் உயரத் தொடங்கியது.
அமெரிக்கப் பொருளாதாரத்தை நிமிர்த்த 850 பில்லியன் டொலர்களை Quantitative Easing (2) இரண்டு என பராக் ஒபாமா முன்பு முன்னெடுத்த விடயத்தையே ஜப்பான் இப்போது கடைப்பிடிக்கின்றது.
இருப்பினும் ஜப்பானில் ஏற்படப் போகும் பொருளாதார உற்பத்தி நெருக்கடிகளும், மத்திய கிழக்கிலுள்ள எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் உருவாகும் புதிய மாற்றங்களும் உலகப் பொருளாதார கட்டமைப்பில் புகுத்தப்பட்ட உலகமயமாதல் கோட்பாட்டில் சிதைவுகளை ஏற்படுத்துமென்பதில் சந்தேகமில்லை.
வட ஆபிரிக்க மற்றும் வளைகுடா நாடுகளில் தற்போது ஏற்பட்டு வரும் மக்கள் எழுச்சிகள், புதிய சமநிலையை உருவாக்கி, அதை உள்வாங்க வேண்டிய நிலைக்கு வல்லரசாளர்களைத் தள்ளப் போகிறது.
துனீசியாவில் ஆரம்பமாகி தற்போது லிபியாவிலும், யெமனிலும் கொதி நிலையை அடைந்துள்ள அரச எதிர்ப்பு மக்கள் கிளர்ச்சிகள், எத்தகைய புதிய மாற்றத்தைக் கொண்டு வருமென்பதை எதிர்வுகூற முடியாத நிலையில் பல அரசியல் ஆய்வாளர்கள் தடுமாறுகின்றனர்.
கடந்த வாரம் லிபிய மக்களைப் பாதுகாப்பதற்காக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் 1973, அரபு லீக்கின் வேண்டுதலோடு லெபனான் மூலம் கொண்டு வரப்பட்டாலும் இந்தியா, சீனா, ரஷ்யா, ஜேர்மனி, பிரேஸில் போன்ற பொருளாதார பலம் பொருந்திய நாடுகள் அதனை ஆதரிக்காமல் மௌனம் சாதித்தன.
தீர்மானத்திற்கு ஆதரவாக, பொஸ்னியா, கொலம்பியா, பிரான்ஸ், கபொன் (Gabon), லெபனான், நைஜீரியா, போர்த்துக்கல், தென் ஆபிரிக்கா, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற 10 நாடுகள் வாக்களித்தன.
வாக்களிப்பில் கலந்து கொள்ளாத இந்தியா கூறும் வாதம் வேறு விதமானது.
ஈராக்கில் ஏற்பட்ட நிலைமை மற்றும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உருவாகும் படைத்துறை கட்டளை மையத்தின் பங்களிப்பு குறித்த நிலைப்பாடுகளால் தாம் ஒதுங்கி இருப்பதாக தன்னிலை விளக்கமளிக்கிறது.
ஆனாலும் லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பென்காசியில் (Bengashi) வாழும் 10 இலட்சம் மக்களை கடாபியின் படைகள் படுகொலை செய்துவிடுமென்கிற அச்சநிலையை இந்தியா கவனத்தில் கொள்ளவில்லை.
முள்ளிவாய்க்காலில் பாரிய இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்ட போது மௌனம் சாதித்த அல்லது விக்கிலீக்ஸ் வெளிப்படுத்துவது போன்று ஆதரவளித்த இந்தியா, 10 இலட்சம் பென்காசி மக்களை அழிவிலிருந்து காப்பாற்றும் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு மௌனம் சாதித்ததையிட்டு புலம் பெயர் தமிழ் மக்கள் அதிர்ச்சியடையவில்லை.
இவை தவிர வான் பறப்புத் தடையைக் (No Fly Zone) கொண்டு வர வேண்டுமென முன்னின்ற அரபு லீக்கின் தலைவர் அமிர் முசா, கூட்டுப் படைகள் நடத்தும் வான் தாக்குதலை தற்போது கண்டிக்க ஆரம்பித்துள்ளார்.
கேணல் கடாபியின் வானூர்தி எதிர்ப்புத் தளங்களை அழிக்காமல் வான் பரப்பில் சூனியப் பிரதேசத்தை உருவாக்க முடியாதென்கிற யதார்த்தத்தை அரபு லீக் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
மக்கள் மீது குண்டு வீசும் கடாபியின் போர் விமானங்கள் வானில் பறப்பினை மேற்கொள்ளக்கூடாது.
அதேவேளை அதனை அமுல் செய்யும் வகையில் கண்காணிப்பில் ஈடுபடும் கூட்டுப்படைகளின் விமானங்களை கடாபியின் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தினாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென நிர்ப்பந்திப்பது போலிருக்கிறது அரபு லீக்கின் நிலைப்பாடு.
பென்காசியை நெருங்கிய கடாபியின் தாங்கிகள் மீது பிரெஞ்சு போர் விமானங்கள் தாக்குதலை நடத்தாமல் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தின்படி பறப்புத் தடையில் மட்டுமே ஈடுபடுவோமென அடம் பிடித்திருந்தால் 10 இலட்சம் மக்கள் வாழும் அப்பிரதேசத்தில் பேரழிவு நிகழ்ந்திருக்கும்.
அக்கூட்டமைப்பில் இருக்கும் கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகளே தமது முழுமையான ஆதரவினை இந்த கூட்டுப்படை நடவடிக்கைக்கு வெளிப்படையாகத் தெரிவிக்கின்றன.
தமது மக்களை நீண்ட காலமாகவே ஒடுக்கி வரும் ஏனைய நாடுகள், இதற்கு ஆதரவு வழங்குமென எதிர்பார்ப்பது தவறு. இன்று யெமனிலும் (ஙுஞுட்ஞுண), லிபியா போன்று மக்கள் கிளர்ச்சி ஆரம்பமாகியுள்ளது.
அந்நாட்டின் ஐ.நா. தூதுவர் மற்றும் சீனா, சிரியா, எகிப்திலுள்ள யெமனின் தூதுவர்கள் தமது பதவிகளை துறந்துள்ளனர். யெமன் அதிபர் அலி அப்துல்லா சாலே (Ali Abdullah Saleh) இன் நம்பிக்கைக்குரிய மூன்று இராணுவ ஜெனரல்கள், கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து விட்டனர். எகிப்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் இவை.
ஆனாலும் ஜனநாயகத்திற்கெதிரான சதிப் புரட்சியை இராணுவம் அடக்குமென அதன் பாதுகாப்பு அமைச்சர் சூளுரைத்துள்ளார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்களைப் பொறுத்தவரை பல புதிய சிக்கலான சமன்பாடுகள் தோற்றம் பெறுவதை அவதானிக்க வேண்டும்.
மேற்குலகத்திற்கு ஆதரவான எதிரான இரு அணிகளை இனங்காணலாம்.
ஆதரவு என்கிற வகையில் சவூதி அரேபியா, பஹ்ரெயின், ஜோர்தான், கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், எகிப்து, ஈராக், யெமன், குவைத் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
எதிரணியில் ஈரான், சிரியா, லிபியா போன்றவை முக்கியமான நாடுகளாகும்.
ஆதரவான நாடுகளில் ஏற்பட்ட ஜனநாயகத்தை நிலைநாட்ட முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துள் தள்ளப்பட்ட மேற்குலகம், எகிப்தில் சமரசப் போக்கினை மேற்கொண்டது.
லிபியாப் பிரச்சினையில் ஜேர்மனியும், பிறேசிலும் ஒதுங்கி நின்றாலும் முரண் நிலையற்ற நிலையில், அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் கூட்டு நடவடிக்கைகயை அவை முற்றாக நிராகரிக்கவில்லை. சந்தைப் பங்கீட்டுப் போட்டியே இதற்கான அடிப்படைக் காரணி.
ஆனாலும் லிபியா, பஹ்ரேன், யெமன் நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் போராட்டங்களினால் மிகவும் தர்மசங்கடமான நிலைக்குள் தள்ளப்பட்டிருப்பது அரபுலகம் என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஒடுக்கும் அரசுகள், எவ்வாறு மக்கள் போராட்டங்களை ஆதரிக்க முடியும் என்பதுதான் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்.
கடந்த வாரம் பஹ்ரேனில் 3 மாத காலத்திற்கு அவசரகாலச் சட்டத்தினை அமுல்படுத்தியதிலிருந்து மக்கள் விரோத நிலைப்பாட்டிலிருந்து அவ்வரசு மாறவில்லை என்பது உணரப்படுகிறது.
ஆகவே, ஜனநாயகமற்ற தன்மை, தீவிரவாதத்தின் ஊற்றுக் கண்ணாக அமைகிறதா? அவ்வாறு மக்கள் புரட்சியினூடாக அரபுலகம், சீரிய ஜனநாயக முறையை உள்வாங்குமாயின் அல்கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகள் நீர்த்துப் போகக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கிறதா? என்பது போன்ற பல வினாக்கள் தற்போது மேலெழுகிறது.
ஆயினும், மேற்குலகிற்கு எதிரான உணர்வுகள், அரபு மக்களை ஆக்கிரமித்திருக்கையில், மேற்குலகின் தலையீடுகள் அந்த உணர்வுகளைக் தணிக்க உதவுமா? இன்னமும் நெஞ்சில் வலிக்கும் விடயமொன்று உண்டு.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போது உலகத் தமிழினம் ஒன்று திரண்டு ஓங்கிக் குரல் கொடுத்தது.
மேற்குலக ஊடகங்கள் யாவும் போரைத் தடுத்து நிறுத்தி மக்களை அழிவிலிருந்து காப்பாற்றுமாறு எழுதிக் குவித்தன.
பயங்கரவாத ஒழிப்பு என்கிற போர்வையில் மக்களின் அழிவினை வேடிக்கை பார்த்தார்கள்.
இன்று முள்ளிவாய்க்கால், லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பென்காசிக்கு இடம்பெயர்ந்திருக்கிறது.
அழிவினைத் தடுக்க வல்லரசாளர் ஓடி வருகின்றார்கள். மக்கள் மீது குண்டு வீசும் விமானங்களை தலைநகர் திரிபோலியில் தேடி அழிக்கின்றார்கள்.
லிபிய மக்களின் இரட்சகராக இன்று மேற்குலகம்.
அன்று யாரும் வரவில்லை. பக்கத்து வீட்டுக்காரரும் வரவில்லை. தமிழினத் தலைவரும், போர் நிறுத்தப்பட்டுவிட்டதாக பொய்யுரைத்து தமிழகத்து எழுச்சியை முடக்கினார்.
ஆகவே மன்னாரில் எண்ணெயை கண்டுபிடிக்கும் வரை பொறுமை காத்தருள்க.

No comments:

Post a Comment

Photobucket