svr.pamini

Montreal Time

Monday, February 7, 2011

எகிப்து ஆர்ப்பாட்டங்களும் உலக மாற்றங்களும்.....

ஏமாற்று ஆட்சியாளரின் எதிர்காலங்கள் கேள்விக்குறியாகிறது. ஆயுள்பரியந்த வம்ச ஆட்சிகள் தூக்கி வீசப்படும் உலகப் புதிய காற்று வீசுகிறது. உலகில் உள்ள எந்த ஆய்வாளரும் முன் எதிர்வு கூறாத பாரிய மக்கள் பேரலை கடல்கோள்போல உலகின் பல பாகங்களிலும் எழும்ப ஆரம்பித்துள்ளது. பொருளாதார மந்தம்,விக்கிலீக்ஸ் உண்மைகள்,ஆட்சியில் இருப்போரால் இனியும் ஏமாற்ற முடியாத அரசியல் மக்களின் புரிதல் யாவும் புதிய எழுச்சிகளை கிளப்பிவிட்டுள்ளன. இதற்கு முதல் எடுத்துக்காட்டு இந்த வாரம் எகிப்திய தலைநகர் கெய்ரோவில் உள்ள தாஹிர் பிளேசில் கூடியுள்ள மக்கள் எழுச்சியாகும்.
சென்ற ஆண்டு வெளியான விக்கிலீக்ஸ் பல உண்மைகளை உலக மக்கள் மன்றில் போட்டுடைத்துப் போயிருக்கிறது. விக்கிலீக்ஸ் தகவல்கள் அனைத்தையும் வகுத்தும் தொகுத்தும் பார்த்தால் இன்று ஆட்சியில் உள்ளவர்கள் மக்களுக்கான ஜனநாயகத்தை நடத்துகிறார்களா என்ற கோபமான கேள்வியையே சாதாரண மக்கள் மனதில் ஏற்படுத்தும்.விக்கிலீக்ஸ் தகவல்கள் ஓர் இடத்திலாவது தலைவர்கள் மக்களின் நலனுக்காகச் சிந்தித்ததாகக் கூறவில்லை.
பல ஆட்சித் தலைவர்கள் மக்களை மந்தைகளாக்கி தங்கள் பிள்ளைகளை எதிர்கால ஆட்சித் தலைவர்களாக நியமிக்க முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். பல நாடுகளில் சாகும்வரை ஆட்சிக்கட்டிலில் இருக்கப் பல தலைவர்கள் முயற்சியெடுத்து வருகிறார்கள். ஜனநாயகத்தில் உள்ள பெரும்பான்மை என்ற ஓட்டையைப் பயன்படுத்தி உலக மக்கள் வாழ்வை கிழிந்த கந்தையாக்கிய தலைவர்களே இன்று அதிகமாகவுள்ளார்கள். இந்த உண்மைகளை விக்கிலீக்ஸ் கிழித்துப்போட்டது.
இப்போது உலகத்தில் நீண்டகாலம் ஆட்சிக்கட்டிலில் இருந்து சுகபோகங்களை அனுபவித்து வரும் ஆட்சியாளரை அகற்ற மக்கள் வீறுகொண்டு வீதிக்கு வரும் புதிய பருவம் ஆரம்பமாகியிருக்கிறது. எகிப்தில் அன்வர் சதாத் படுகொலைக்குப்பின் ஆட்சிக்கு வந்த கொஸ்னி முபாரக் இன்றுவரை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறங்கவில்லை. அமெரிக்காவோடு கைகோர்த்து இஸ்ரேலுக்கு வசதியான களம் அமைத்து இவர் நடத்திய ஊழல் ஆட்சி இப்போது விளிம்பிற்கு வந்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர் அமெரிக்கக் கொடியையும் தீயிட்டுக் கொழுத்தியதை அவதானிக்க முடிகிறது.
எகிப்தில் உருவான புரட்சிகர எழுச்சி இன்று யேமனுக்கு பரவியுள்ளது. யேமன் நாட்டின் அதிபர் அலி அப்பதுல்லா சலா ஆயுள் பரியந்தம் ஆட்சிக் கட்டிலில் இருக்க ஆசைகொண்ட ஒருவர். அவருடைய ஊழலுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பியபோது 2013 இல் ஆட்சிக் கட்டிலில் இருந்து வெளியேறுவேன் என்று தெரிவித்திருந்தார். இன்று அதிகாலை அவரை பதவி விலகும்படி கோரி சுமார் 20 ஆயிரம் மக்கள் யேமன் நாட்டின் வீதிக்கு வந்துள்ளார்கள். ஆபிரிக்கா,மத்தியகிழக்கு, ஆசியா,தென்னாபிரிக்கா கண்டங்களில் போலி ஜனநாயக முத்திரையில் வகை தொகையின்றி நிறைந்து கிடக்கும் ஆட்சித் தலைமைகள் படிப்படியாகக் கிளர்ச்சிகளைச் சந்திக்க நேரிடும் காலம் உருவாகியுள்ளது. இன்று உலகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மக்களை வீதிக்கு இறங்கக்கூடிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே உலகம் விரும்பியோ, விரும்பாமலோ பல புதிய மாற்றங்களைச் சந்திக்கப்போகிறது.
உலகத்தின் சொத்துகளும் உடைமைகளும் சிறிய குழுவினரிடம் இருக்க பெருந்தொகை மக்கள் ஏழைகளாக உள்ள இன்றைய உலகின் பொருளாதார சமமின்மை மீது பலத்த அடி விழப்போவதும் தெரிகிறது. நேற்றுவரை மக்களின் ஜனநாயக ஆர்ப்பாட்டங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யமாட்டோம் என்று போலி நாடகமாடிய எகிப்திய இராணுவம் இன்று தொலைக்காட்சியில் தோன்றி ஆர்ப்பாட்டக்காரரைக் கலைந்துபோகும்படி கூறியுள்ளது. நேற்று கொஸ்னி முபாரக் ஏவிவிட்ட குண்டர்கள் ஆர்ப்பாட்டங்களில் கலவரங்களை ஏற்படுத்தி இரத்தக்களரியை உண்டு பண்ணினார்கள். இன்றிலிருந்து நிலைமை அடி தலையாக மாறுவதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள். எகிப்தின் தாஹிர் பிளேஸ் பெரும் இரத்தக் களரியாக மாறப்போவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். இது இவ்விதமிருக்க எகிப்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களால் மிரண்டுபோன இஸ்ரேல் ஏற்கனவே எகிப்து தன்னுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மாற்றக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. தான் மறுபடியும் தேர்தலில் நிற்கப்போவதில்லை. வரும் செப்டெம்பர் தேர்தல் நடக்கும் என்று கொஸ்னி முபாரக் கொடுத்த இற்றுப்போன கயிற்றை ஆர்ப்பாட்டக்காரர் அடையாளம் கண்டுவிட்டனர். இன்று இராணுவம் கொடுத்த எச்சரிக்கை ஆர்ப்பாட்டத்தில் முபாரக் ஏற்படுத்திய கலவரம் யாவும் அவருடைய வாக்குறுதியின் கபடத்தன்மையையே காட்டுவதாயுள்ளது. அமெரிக்காவும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாது தனது நலன்களைத் தக்க வைக்க நாடகமாடி வருகிறது.
ஆனால், மகத்தான ஒன்று உலக அரங்கில் இருந்து மறைய ஆரம்பிக்கிறது என்பதை இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் எடுத்துரைக்கின்றன. மக்கள் ஆட்சி வரலாற்றில் அல்லது ஜனநாயகத்தின் வரலாற்றில் புதிய மாற்றங்கள் ஏற்படப்போகிறது. உலகளவில் ஏற்படும் இந்த மாற்றங்கள் எடுத்துரைக்கின்றன. இந்த அதிர்வுகள் வருங்காலத்தில் ஐ.நா.வை அடிதலையாக மாற்றியமைக்க வேண்டிய நிலைமையையும் ஏற்படுத்தலாம். அன்று முதலாவது உலக யுத்தத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச சங்கம் விட்ட அத்தனை தவறுகளும் இன்றைய ஐ.நா.வின் செயற்பாட்டில் ஏற்பட்டுள்ளது. பிரான்சியப் புரட்சிபோல உலக மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான பேரசைவு நகர ஆரம்பித்துள்ளதை தற்போது உணர முடிகிறது. இதற்கு ஐ.நா. வின் தப்பான அரசியலும் ஒரு காரணமாகும்.
இன்று எகிப்திய ஆர்ப்பாட்டங்களை முதன்மைப்படுத்தி செய்தி வெளியிட வேண்டாமென பல நாடுகள் தடைவிதித்து வருவதும் எகிப்தின் ஆர்ப்பாட்டங்கள் இணையம் மூலம் தடுக்கப்படுவதும் பல நாடுகளில் பரவலாக நடைபெறுகிறது.
விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய உண்மைகள்,உலகப் பொருளாதார மந்தம்,ஆட்சியில் சாகும்வரை இருக்கலாம் என்ற தலைவர்களின் நீர்த்துப்போன கனவுகள், வறுமையாலும் ஏமாற்று அரசியலாலும் நொந்துபோன உலக மக்கள், ஐ.நா.வின் பொறுப்பற்ற செயலால் வெந்துபோன உள்ளங்கள், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மாற்றமடைய வேண்டிய உலகப் பொருளாதாரம் ஆகிய ஆறு அம்சங்களும் ஆறுபோல பெருகி உலகை ஓர்ஆட்டு ஆட்டுவிக்கக் கூடிய அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிகின்றன. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று போலி முழக்கமிட்ட பல நாட்டுத் தலைவர்கள் அந்த மகேசனின் தீர்ப்பைச் சுவைக்கும் பருவம் ஆரம்பித்துள்ளது

No comments:

Post a Comment

Photobucket