இலங்கை இராணுவத்தினர் என்ன மனிதர்களா இல்லை அரக்கர்களா? நாம் புலிப்பால் குடித்த பரம்பரை. மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் உலக வரைபடத்தில் இலங்கை காணாமல் போய் விடும். இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து நாகையில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் உரையாற்றும்போது நடிகர் விஜய் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரஸ்தாப கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் 4 மணிக்கு மேடைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 4 மணிக்கு திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் 5.45 மணிக்கே நடிகர் விஜய் பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்.
அப்போது திரண்டிருந்த ரசிகர்கள் கைகளை தூக்கி ஆரவாரம் செய்தனர். நடிகர் விஜய் ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து கையை அசைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார்.
இதற்கிடையே நடிகர் விஜய் பொதுக்கூட்ட மேடையில் பேசிய போது, ஒரு குடும்பத்தில் அண்ணன், தம்பியை இழந்தால் எவ்வாறு துன்பப்படுவோமோ அதுபோல இன்று நாம் ஒன்று அல்ல, 2 அண்ணன்களை இழந்து துயரப்பட்டு உள்ளோம் என பேசிக்கொண்டு இருந்த போது மழை தூறியதாலும், ரசிகர்கள் விஜயை பார்ப்பதற்காக முண்டியடித்துக்கொண்டு ஆர்ப்பரித்து வந்ததாலும் விஜயால் பேச முடியவில்லை. இதைத்தொடர்ந்து விஜய் பேச்சை நிறுத்தி விட்டு ஓட்டலுக்கு திரும்பினார்.
பின்னர் சுமார் அரைமணி நேரம் கழித்து மீண்டும் விஜய் மேடைக்கு வந்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு வருகிறார்கள். படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். இங்கு நாம் இந்த கண்டன பொதுக்கூட்டத்தை நடத்துகிறோம். இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கிறது.
கடந்த சில வருடங்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தாக்கப்பட்டு உள்ளனர். 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். நூற்றுக்கணக்கான மீனவர்களும் சிறை பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
நாகை மீனவர் ஜெயக்குமார் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார். அவரை கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து கடலில் தூக்கி வீசி உள்ளனர்.
இலங்கை இராணுவத்தினர் என்ன மனிதர்களா இல்லை அரக்கர்களா?
இவ்வளவு நடந்தும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தெரியவில்லை.
இலங்கை இராணுவத்திடம் நாம் அடிபணிந்து கிடக்கிறோம் என்று அர்த்தம் அல்ல.
நாம் புலிப்பால் குடித்த பரம்பரை. நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட.
மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் உலக வரைபடத்தில் இலங்கை காணாமல் போய் விடும்.
ஏதோ வந்தோம், நாம் கூட்டம் நடத்தினோம் என்று இருக்கக்கூடாது. சேவை செய்ய வேண்டும்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், மீனவர்களின் நிலை குறித்தும் நீங்கள் பிரதமர் மற்றும் முதல் அமைச்சருக்கு தந்தி அனுப்ப வேண்டும். நாளை காலை நீங்கள் தந்தி அனுப்ப வேண்டும்.
இனி தமிழர்களின் மீது விழும் ஒவ்வொரு அடியும், என் மீது விழும் அடியாக நினைத்து போராடுவேன் என்றார்.
No comments:
Post a Comment