தூள் கிளப்பும் யாழ் பாட்டு தாத்தா முதல் டாடா வரை 'கொலவெறி’க்கு அடிமையாக ஆகிவிட்டார்கள். தமிழ்நாட்டு தனுஷ் கொடி இன்று இந்தி வரை பறக்கக் காரணமும் இந்தக் 'கொலவெறி’ தான்! இதேபாடலை எம்.ஜி.ஆர். பாடினால் எப்படி இருக்கும் ... சிவாஜி உச்சரித்தால் எப்படி இருக்கும் என்று உடான்ஸ் பாட்டுக்கள் இணையத்தில் உலவும் வேளையில், யாழ்ப்பாணத்தில் இருந்து அழகுத் தமிழ் 'கொலைவெறிப் பாடல்’ ஒன்று வந்திருக்கிறது. தமிழ் உணர்வாளர்களும் புலம்பெயர் ஈழத் தமிழர்களும் இந்தப் பாடலால் உச்சி குளிர்ந்து கிடக்கிறார்கள். 'என் தமிழ் மொழி மேல் உனக்கேன் இந்தக் கொலைவெறிடா’ என்று தொடங்கும் அந்தப் பாடலின் வரிகளே, சூட்டைக் கிளப்புகின்றன. இந்தப் பாடல் இணையதளத்தில் வெளியான மூன்று நாட்களுக்குள் 1.24 லட்சம் பேர் கேட்டு ரசித்திருக்கிறார்கள். 4.26 நிமிடங்கள் ஓடுகிறது இந்த வீடியோ பாடல். போர் முடிந்த ஈழத்தில், நொந்துகிடக்கும் தமிழ் மக்களின் நெஞ்சைத் தொடும் பாடலாக இது. .
செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்…
கம்பனின் வரிகள்…
வள்ளுவன் குறள்கள்…
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு…
பழமை பாடும்…
தமிழர் பெருமை எங்கே?
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யேசு, புத்தன்,
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு – தினம்
தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!
ஆஸ்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் தமிழில்
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் தமிழில்..!
தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு
தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பைத் தொலைத்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…
பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல – அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா
No comments:
Post a Comment